welcome

செவ்வாய், 16 ஜூன், 2009

காதலருக்குள் பரிபாஷை





காதலருக்குள் பரிபாஷை

நீ யாரோ? நான் யாரோ? என்று அறிமுகம் இல்லாதவர்கள் போன்று காதலர்கள் பொது இடங்களில் நடந்துகொள்வார்கள். ஆனால் ஒரு பார்வையிலேயே சகலமானவற்றையும் பரிமாறிக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள் காதலர்கள்.

அப்படித்தான் காதலி காதலனை நள்ளிரவில் வந்து சந்திப்பதாகக் கூறியிருந்தாள். காதலன், குறிப்பிட்ட இடத்தில் வந்து காத்திருந்தான். விடியும் வரை காத்திருந்ததுதான் மிச்சம். அவள் என்னவோ வரவேயில்லை.

காதலன் கோபத்தோடு போய்விட்டான்.

மறுநாள், காதலி தன் தாயோடு கோயிலுக்குப் போகிறாள். காதலன் நண்பர்களுடன் அதே கோயிலுக்குப் போகிறான். காதலனின் கோபம் அவன் முகத்தில் நன்றாகத் தெரிகிறது. காதலி தான் வராத காரணத்தைக் குறிப்பாகக் கூறுகிறாள். தாயிடம் விடுகதை போடுவது போலப் பேசுகிறாள்.

வெட்டியதால் சாகவில்லை, வெட்டாவிட்டால் செத்திருப்பேன்.

செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன்.

வந்ததால் வரவில்லை, வராவிட்டால் வந்திருப்பேன்.”

இதைக்கேட்ட காதலன் முகம் மலர்ந்தது. அவள் வராத காரணம் அவனுக்குப் புரிந்து விட்டது. உற்ற நண்பனிடன் அவன் அந்த குறிப்பு மொழியை விளக்குகிறான்.

அவள் எனக்காகக் கொல்லைப் பக்கமாக வந்திருக்கிறாள். உயிரைப் பணயம் வைத்து வந்திருக்கிறாள். அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய வேளையில் மின்னல் வெட்டியது அவ்வொளியில் தான் தெரிந்தது ஒரு பாழுங்கிணறு. தரையோடு தரையாக இருந்த அக்கிணற்றில் அடி வைத்திருந்தால் விழுந்து செத்திருப்பாள்.

அதுதான், வெட்டியதால் சாகவில்லை வெட்டாவிட்டால் செத்திருப்பேன்என்று கூறியதன் பொருள்.

மீண்டும் இருளில் தட்டுத்தடுமாறி நடக்கிறாள். காலை அழுந்த வைத்தபோது வழவழப்பாக ஏதோ தட்டுப்பட்டது. அடுத்த மின்னல், அவ்வொளியில்தான் அங்கு செத்துக்கிடந்த பாம்பின்மீது கால்வைத்திருப்பது தெரிந்தது. அதைத்தான், செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன்என்று கூறுகிறாள். பாம்பு செத்ததால் அவள் சாகவில்லை. அது மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அது கடித்து இவள் செத்திருப்பாள்.

பயம் நீங்கி மேலும் நடந்து கொல்லை வேலிப்படலைத் திறந்து வர முயன்றிருக்கிறாள். அப்போது அடுத்த மின்னல் அதன் ஒளியில் பார்த்தபோது வெளியூர் சென்றிருந்த தன் தந்தை அவசரமாகத் திரும்பி வருவது தெரிகிறது அதைத் தான் அவள், (அவர்) வந்ததால் வரவில்லை (அவர்) வராவிட்டால் வந்திருப்பேன் என்கிறாள்.

விளக்கம் கேட்ட நண்பன் வியந்துபோனான். பாம்பின் கால் பாம்பறியும் என்றாற்போல் அவள் சொல்வதன் அர்த்தம் இவனுக்குத்தான் தெரிகிறது என்று விஷமப் புன்னகை பூத்தான்.

காதலர்கள் பேச்சில் உட்பொருள் உருவகம் பிறிது மொழிதல் என எல்லாமே அடங்கியிருக்கிறது.



Glitter Text Generator

Glitter Text Generator

1 கருத்து:

  1. அருமை அருமை அருமை நண்பரே! அந்தக்காட்சியை அருமையாக இரசித்தது மட்டுமன்றி, அருமையாக விளக்கியும் உள்ளீர்கள்.
    ஆனாலும், அந்தக் கடைசிவரிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பொருள்,
    நான் கேள்விப்பட்டதைவிட வித்தியாசமானதாகத்தான் உள்ளது.
    நான் கேள்விப்பட்டது : ´வந்ததால் வரவில்லை: வராவிட்டால் வந்திருப்பேன் ´என்று சொல்லிவிட்டு நாணத்துடன் தலைகவிழ்ந்து நின்றாள் - என்பதாகத்தானிருந்தது.
    அதன்பொருள், இவ்வளவு இன்னல்களையும் தாண்டிவரும்போதும்,
    மாதவிலக்கு வந்துவிட்டது. அது வந்ததால் வரவில்லை.

    பதிலளிநீக்கு