welcome

வியாழன், 18 ஜூன், 2009

எதார்த்தம்.

எதார்த்தம்.

பீலி கொண்டு

உன்

பெயரெழுதப் போகிறேன்!

பேனா முள்பட்டு

உன் பெயர்

காயப்பட்டு விடுமோ என்ற

கலக்கம் எனக்கு.

உன் நாணம்

என்னை

மேயச் சொல்கிற வேலியோ?

புன்னகையின் கணத்திலேயே

வாடிவிடும்

உன் பூ உதடு

என்

முத்தச் சுமையைத் தாங்க

முடியுமோடீ?

அது கூந்தலா

இல்லை

இரவின் ஒரு பகுதி இன்னும்

விடியாமலே இருக்கிறதா?

என் கனவுகளில்

நீ நடமாடுவதால் தானோ

என்

உறக்கம் மணக்கிறது?

தன்

சுவாசக் காற்றையே

ராகமாக்கி விடும்

புல்லாங்குழலா நீ?

வா!

நமது

பொன் மாளிகைக்கு

பளிங்குத் தாஜ்மகால்

ஒரு

படிக்கல் ஆகுமா

என்று

பரிசீலிக்கலாம்.

உன் காலடித் தடங்கள்

பாதைகளுக்கு-

உன்

பாதங்கள் கொடுக்கும்

ஒத்தடங்களோ?

உன் சுவடுகளாலேயே

எனக்கொரு

சாலை செய்துகொள்ளட்டுமா?

பேசு!

எனக்கிருப்பதோ

உன்

இசையால் மட்டுமே

தனிகிற தாகம்

உன்

இதழ் கிண்ணங்களில்

நீ நிரப்பி வைத்திருப்பதோ

வெறும் மௌனம்.

பறந்துவிடுவோமா?

இந்த

மனிதத் தூசுகள்

நம் கண்களில் விழாமல்...

மேகப்புழுதியில்

நம் பாதம் படாமல்...

உன் சிற்றாடையில் வானம்

சிக்கினால் உதறிவிட்டு...

விண்மீன்கள் என்ற

விடிவிளக்கு அணையாமல்

மெல்ல மெல்ல மூச்சுவிட்டு...

பறந்து போய் விடுவோமா?

* * * * *

முடிந்தது

காதலிக்குக்

கவிதையில் எழுதிய

கடிதத்தை மடித்தான் காதலன்.

பையினுள் சென்ற கை

அதன்

மூலைகளிலெல்லாம்

முக்குளித்தது!

“அடடே!

அஞ்சல் உறைக்கு

’அஞ்சு காசு” குறைகிறதே!”

-கவிஞர் வைரமுத்து.

***************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக